×

வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்த நாள் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை: முதல்வர் அறிவிப்பால் பேரன் மகிழ்ச்சி

சென்னை: வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜாஜி சாலை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி மரியாதை செலுத்தினார். சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வபெருந்தகை, துணை தலைவர்கள் தாமோதரன், உ.பலராமன், பொன் கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தம், மாவட்ட தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், சிவராஜசேகரன், எம்.பி.ரஞ்சன்குமார், டில்லி பாபு, கலைபிரிவு தலைவர் சந்திரசேகர், திருவான்மியூர் மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வஉசி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமாகா சார்பில் மாநில தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சக்திவேல், முனைவர் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வஉசியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல், வஉசியின் சிலைக்கு அவரது பேரன் டாக்டர் கபிலாஸ் போஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து டாக்டர் கபிலாஸ் போஸ் அளித்த பேட்டியில், ‘வஉசியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு சட்டப்பேரவையில் 14 திட்டங்களை அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவரது புகழையும், பெருமையையும் வருங்கால இளைஞர்களும், மாணவர்களும் கற்றுக் கொள்ளும் வகையில் திரைப்படங்கள், பாடப்புத்தகங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வருக்கு எங்களது குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,’ என்றார்.

Tags : W. Chidambaranar ,Party ,Chief Minister , W. Chidambaranar 150th Birthday Party Leaders Sprinkle Flower Honor: Grandson happy with Chief Minister's announcement
× RELATED அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு; மாஜி...